Monday, October 4, 2010

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் - உலகமெங்கும் அபார வெற்றி


உலகமெங்கும் ஒரே குரல் - மாபெரும் வெற்றி. சூப்பர் ஸ்டாரின் எந்திரன் இந்திய திரை உலகில் இதற்கு முந்தைய சாதனைகளை உடைத்து எவராலும் உடைக்க முடியாத புதிய வசூல் சாதனை படைத்தது இருக்கிறது. ஆரவார அறிமுக காட்சி இல்லை,பன்ச் டயலாக் இல்லை, ஆபாசம் அறவே இல்லை, ஆரம்பம் முதல் இறுதி வரை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் அட்டகாசம் செய்திருக்கிறார் ஷங்கர். ஒரு விஞ்ஞானியாக, ரோபோ நல்லவன் ,ரோபோ வில்லன் என மூன்று வேடங்களிலும் கலக்கு கலக்கு என்று கலக்கி விட்டார் தலைவர். ஒவ்வொரு காட்சியும் சூப்பர்.
ஏ. ஆர்.ரகுமானின் சூப்பர் ஹிட் பாடல்கள், பீட்டர் ஹெய்னின் சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள், அமரர் சுஜாதாவின் வசனங்கள், கவிப்பேரரசு வைரமுத்து,பா.விஜய், கார்க்கி ஆகியோரின் அற்புதமான பாடல்கள், ரத்னவேலின் ஒளிப்பதிவு , இப்படி சூப்பர் கூட்டணி அமைத்து மகத்தான வெற்றிப்படம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். கலாநிதி மாறன் அவர்களின் சன் பிக்சர்ஸ் முதல் படமே சூப்பர் டுபர் ஹிட். முன்பெல்லாம் இந்திய திரையுலகில் முக்கியமான சூப்பர் ஹிட் படமாக ஷோலே வை சொல்லுவார்கள். இனி சூப்பர் ஸ்டாரின் எந்திரனை சொல்லுவார்கள். இந்த படத்தின் சிறப்புக்காட்சியில் தலைவர் ரஜினி அவர்களுக்கு கைகொடுத்து வணங்கினேன். இந்தப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ க்ளிப்பிங்க்சில் தலைவருக்கு பின்னால்(கருப்பு சட்டை ) நான் வரும் காட்சியை பார்க்கும் பொழுதெல்லாம் அகமகிழ்ந்து போகிறேன். நன்றி.

Monday, August 9, 2010

அகில உலகையே கலக்கிகொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படப்பாடல்கள்



இன்டர்நெட் டவுன்லோட்,எம்.பி.த்ரீ யுகமான இன்றைக்கும் விற்பனையில் புதிய சாதனை படைத்தது கலக்கிக்கொண்டிருக்கிறது சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படப்பாடல்கள். சூப்பர் ஸ்டார், ஏ. ஆர். ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, ஷங்கர்,சன் பிக்சர்ஸ் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
முதல் பாடல் பூமிக்கு வரும் ஏந்திரனை வரவேற்பதாக அமைந்துள்ளது.
'புதிய மனிதா பூமிக்கு வா ... எக்கை வார்த்து சிலிகான் சேர்த்து வயரூட்டி, உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி என்று ஆரம்பித்து
'நான் கண்டது ஆறறிவு -நீ கண்டது பேரறிவு ,நான் கற்றது ஆறு மொழி-நீ பெற்றது நூறு மொழி , ஈரல் கணையம் துன்பமில்லை, இதயக் கோளாறேதுமில்லை.தந்திர மனிதன் வாழ்வதுமில்லை,எந்திரம் வீழ்வதில்லை என்று எந்திரன் உருவாக்கத்தையும்,பெருமைகளையும் பற்றி அற்புதமாக பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். ரகுமான் அவர்களின் பிரமிக்க வைக்கும் இசையில் அவரும், பாடும் நிலா எஸ்.பி.பி, மற்றும் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் முதல் முறையாகவும் பாடியுள்ளார்கள் . அட்டகாசமான பாடல்.

இரண்டாவது பாடல் விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோசல் ஆகியோரின் இனிமையான குரலில் ஒலிக்கும் 'காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை, நியுட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ...உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச்சிந்தனை... அழகின் மொத்தம் நீயா என்று காதலையும் விஞ்ஞானத்தையும் கலந்து கலக்குகிறார் கவிப்பேரரசு. மேலும்
'பட்டாம்பூச்சி கால்களைக் கொண்டு தான் ருசியறியும்-காதல் கொள்ளும் மனிதப் பூச்சி கண்களைக்கொண்டு தான் ருசியறியும்.ஓடுகிற தண்ணியில் ஆக்சிஜன் அதிகம் - பாடுகிற மனசுக்குள் ஆசைகள் அதிகம் என்றெல்லாம் பிய்த்து உதறியிருக்கிறார் வைரமுத்து அவர்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

மூன்றாவதாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மகன் பேராசிரியர் கார்க்கி அவர்கள் முதல் முறையாக எழுதியுள்ள 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ' என்ற பாடல். முப்பது ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து அவர்கள் எழுதி முதலில் வெளியான பாடல் இதே சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய 'காளி' திரைப்படப்பாடல். முப்பது வருடங்களுக்கு பின் இதே சூப்பர் ஸ்டாருக்காக அவர் மகன் முதல் பாடல் எழுதுவது இறைவன் கொடுத்த வரமல்லவா...
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபித்துள்ளார் கார்க்கி அவர்கள்.

'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ -முதல் முறை காதல் அரும்புதோ
பூஜ்யம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு- மின்மீன்கள் விண்ணோடு, மின்னல்கள் கண்ணோடு -கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு என்று ஆரம்பித்து
'எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா
ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப்போக சொல்வாயா
உயிரியல் மொழிகளில் எந்திரன் நானடி-உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
என்று பிரமிக்க வைக்கிறார். ரகுமான் இன்னிசை அமைத்து இனிமையாக பாடி கலக்குகிறார்.

நான்காவதாக வருவது 'அரிமா அரிமா ' பாடல்.
'இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்.
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவும் நிலவும் தலை முட்டும்'
என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பெருமை சொல்லி ஆரம்பிக்கிறது.
'அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா- உன் போல் ஒரு பொன்மான் கண்டால்
சும்மா விடுமா என்று கர்ஜிக்கிறது. 'உன் பச்சைத்தேனை ஊற்று- என் இச்சைத்தீயை ஆற்று- அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலைபோட்டு'
(முதலில் சேலை இலை போட்டு என்று எழுதி பிறகு கட்டில் இலை போட்டு என்று திருத்தம் செய்துள்ளார்) என்றும், காமுற்ற கணினி நான் -சின்னஞ் சிறுசுகளின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான் என்றும் பாடல் முழுவதும் சிம்ம கர்ஜனை புரிந்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

ஐந்தாவதாக பா.விஜய் அவர்களின் சிருங்காரமான வரிகளில் 'கிளிமாஞ்சாரோ-மலைக்கனி மாஞ்சாரோ-கன்னக்குழி மாஞ்சாரோ ' என்ற சூப்பர் பாடல்.
'வேர் வரை நுழையும் வெயிலும் நான்- நீ இலைத்திரை ஏன் இட்டாய்
உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு ஒரு யுகம் முடித்து திற அன்பாய் '
அக்கக்கோ -நான் தின்னிக் கோழி ,அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ
இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ ' என்றெல்லாம் பாடலுக்கும் சிருங்காரம் சேர்க்கிறார் பா.விஜய் அவர்கள்.
ஆறாவது பாடல் கார்க்கி அவர்கள் எழுதியுள்ள பூம் பூம் ரோபோடா தாளம் போடா வைக்கும் அருமையான பாடல்.
மொத்தத்தில் ஒவ்வொரு பாடலும்(நீண்ட நாட்களுக்கு பின்) கதையோடு ஒட்டி வரும் ,வித்தியாசமான வரிகளைக்கொண்ட அற்புதமான் பாடல்கள். பிரமிக்க வைக்கும் இசை. ரசிகர்களை அடுத்த கட்ட ரசனைக்கும் அழைத்து செல்கிறது.
இந்திய திரை உலகிலேயே புதிய முயற்சி. வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம்.

Monday, July 26, 2010

மாறுவேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


பொதுவாக வி.ஐ.பி.களுக்கு தாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வர முடியாது. பொதுமக்களின் அன்புத்தொல்லையே காரணம். ஆனால் நம் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறரால் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மாறு வேடத்தில் ,தான் விரும்பிய இடங்களுக்கு சென்று வருவார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நடந்த தாஜ்மஹால் பற்றிய கவியரங்கத்திற்கு தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு கண்ணாடி அணிந்து கொண்டு கடைசி வரிசையில் உட்கார்ந்து நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தார்.அகில உலக சூப்பர் ஸ்டார்,இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்,உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அந்த அன்புத்தலைவன் நினைத்திருந்தால் எப்படிப்பட்ட ராஜமரியாதை கிடைத்திருக்கும். ஆனால் எந்த படாடோபமும் இல்லாமல் எவ்வளவு எளிமையாக கடைசி வரிசையில் அமர்ந்து பார்க்கிறார் பாருங்கள். அதனை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போது கண்டு மகிழ்ந்தேன். அந்த புகைப்படத்தையும் காட்சியையும் இணைத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்.

Monday, July 12, 2010

கவிப்பேரரசு வைரமுத்து : சந்தோஷம் சந்தோஷம்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் யூத் திரைப்படத்திற்காக எழுதிய சந்தோஷம் சந்தோஷம் என்ற பாடல் முத்து முத்தான வரிகளைக்கொண்ட அற்புதமான பாடல். மன காயத்திற்கு மருந்து தடவும் அருமையான வரிகள் கொண்டது இப்பாடல். படத்தின் நாயகன் விஜய்க்கு நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் திருமணத்தின் போது தன் காதலனுடன் சென்று விடுவாள். பிறகு தன் காதலன் கயவன் என்பதை உணர்ந்து தற்கொலைக்கு முயன்று, பின் காப்பாற்றப்பட்டு தான் ஒதுக்கிய விஜயிடமே அடைக்கலம் ஆவாள். அவள் தவறுகளை மன்னித்து அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விஜய் பாடும் பாடல் தான் இது.தவறுகள் மன்னிக்க கூடியவை தான்,தவறுகளைத் திருத்திக்கொண்டு வாழ வேண்டும் என்பதை எளிமையாக கூறுகிறது இந்த பாடல். மன வலிக்கு ஒத்தடம் கொடுத்து மன வலிமையைத் தரும் அந்த வைர வரிகள்:

'சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்.
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு... ஓஹோ ஹோ ....
வெற்றியைப்போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்தியபிறகு தான் நாகரிகம் வளர்ந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பருவக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத்தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை...

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய்ப் போய்விடில்
மனிதன் ஆசையே இங்கு மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடைய பிழையில்லையே
துன்பம் என்ற சிப்பிக்குள் தான் இன்பம் என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்த்துளியை வைரம் செய்யும் கலையைக் கற்று கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்'...
இந்த இனிய பாடலை தந்த கவிப்பேரரசை அன்புடன் வாழ்த்துகிறேன்.

Sunday, July 4, 2010

கவிப்பேரரசு வைரமுத்து: வெற்றி நிச்சயம்


மனதிற்கு நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வேண்டுமா... சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை படத்தில் இடம் பெறும்
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'வெற்றி நிச்சயம்' பாடலைக் கேட்டால் போதும். இந்தப்பாடல் உருவான காலகட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு மட்டுமல்ல பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா நிறுவனம், இளையராஜாவை விட்டு பிரிந்து சிறிது தொய்வாக இருந்த வைரமுத்து அவர்கள், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த தேனிசைத்தென்றல் தேவா அவர்கள்,இயக்குனர் சுரேஷ்க்ருஷ்ணா அவர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை தந்து மாபெரும் வெற்றி பெற்ற பாடல் இது. துவண்டு போய் இருப்பவர்களுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுத்து நிமிர்ந்து எழச்செய்யும் பாடல் இது . ஒவ்வொரு வரிகளையும் கவனியுங்கள், உண்மை தெரியும்.
வெற்றி நிச்சயம்- இது வேத சத்தியம் , கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம். அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் - உன்னை வெல்வேன்...
இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது - சூரியன்
தூங்கலாம்,எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுமே...
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே....

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் -தாழ்வதில்லை தன்மானம்
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்...
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்விகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே...
எனது நடையில் உனது படைகள் ஒடிபடுமே-
அடே நண்பா உண்மை சொல்வேன் சவால்
வேண்டாம். உன்னை வென்றேன்...
வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறி, கோபம், ஆவேசம், உண்மை , நம்பிக்கை, தெளிவு, இவை ஒன்று சேர உருவான இந்த பாடல் என் இதயத்தில் முதல் இடத்தை பிடித்த பாடல்.

Wednesday, June 30, 2010

காவிய கவிஞர் வாலி


தமிழ்த்திரையுலகில் ஐம்பதாண்டு காலமாக பாடல்கள் எழுதுவதோடு அவதார புருஷன் போன்ற காவியங்களை படைத்தவர் வாலி. அவர்கள்.கவியரசு கண்ணதாசன் காலம் முதல்   இன்று நா. முத்துகுமார் காலம் வரை அனைவருக்கும் ஈடு கொடுத்து எழுதி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் வாலி அவர்கள். இந்தியத்திரையுலகில் ஒரு பாடலுக்கு அதிகப்பட்சமாக இரண்டரை லட்சம் (சிவாஜி படத்தில் அதிரடிக்காரன் பாடல்)பெற்ற ஒரே கவிஞர் வாலி. அன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல் இன்றுஅருண் விஜய் வரை அவர் எழுதிய பாடல்களின் ஒரு தொகுப்பு.
எம்.ஜி.ஆர் - எங்க வீட்டு பிள்ளை : நான் ஆணையிட்டால் உட்பட ஏராளம்.
ஜெமினிகணேசன் - இதயத்தில் நீ: யார் சிரித்தால் என்ன
சிவாஜிகணேசன் - இருமலர்கள்: மாதவிப்பொன் மயிலாள் உட்பட ஏராளம்
ரவிச்சந்திரன் -அதே கண்கள் - சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்
ஜெய்ஷங்கர்- மன்னிப்பு : நீ எங்கே என் நினைவுகள் அங்கே
ஏ,வி.எம்.ராஜன்- சக்கரம்: காசேதான் கடவுளடா
நாகேஷ்: சர்வர் சுந்தரம்: அவளுக்கென்ன அழகிய முகம்
ஸ்ரீகாந்த்- பூவா தலையா : போடச்சொன்னா போட்டுக்கறேன்
முத்துராமன் - பஞ்சவர்ணக்கிளி :அவளுக்கும் தமிழ் என்று பேர்
தேங்காய் ஸ்ரீனிவாசன் - கலியுகக்கண்ணன்: ஜெயிச்சுட்டே கண்ணா
ஜெய்கணேஷ்- அன்பே சங்கீதா: கீதா சங்கீதா
வி.கோபாலகிருஷ்ணன்- நெஞ்சிருக்கும் வரை : நெஞ்சிருக்கும் எங்களுக்கு
விஜயகுமார் - நான் குடித்துக்கொண்டே இருப்பேன்: குடிக்காதே தம்பி
கமல் - சகலகலா வல்லவன்: இளமை இதோ உட்பட ஏராளமான படங்கள்
ரஜினி - மன்னன் : அம்மா என்றழைக்காத உட்பட ஏராளமான படங்கள்
அர்ஜுன் - சாது : அம்மம்மா
பார்த்திபன் - பெண்டாட்டி தேவை படப்பாடல்
நாசர் - அவதாரம் :தென்றல் வந்து
எஸ்.வி.சேகர் : மணல்கயிறு : மந்திரப்புன்னகை
விஜயகாந்த்- வைதேகி காத்திருந்தாள்: ராஜாத்தி உன்னை
பிரபு - சின்ன தம்பி : தூளியிலே ஆடவந்த
ராமராஜன்-ஊரெல்லாம் உன் பாட்டு தான்-ஊரெல்லாம் உன் பாட்டு 
சத்யராஜ் - மிஸ்டர் பாரத் : என்னம்மா கண்ணு
பாண்டியராஜன் - ஆண் பாவம்: காதல் கசக்குதய்யா
விஜய்- பிரியமானவளே : எனக்கொரு சிநேகிதி உட்பட நிறைய பாடல்கள்
அஜித் - தீனா : வத்திக்குச்சி பத்திக்காதுடா
மாதவன் - மின்னலே : அழகிய தீயே
விவேக் &வடிவேலு : லூட்டி : நான் மதுரை
சிலம்பரசன் - சிலம்பாட்டம் : தமிழ்
விக்ரம் - பிதாமகன் : பிறையே
கவுண்டமணி-பிறந்தேன் வளர்ந்தேன் 
முரளி - இதயம் : போட்டு வைத்த
பிரபுதேவா - ஜென்டில்மேன் : சிக்குபுக்கு
ராஜுசுந்தரம்- இதயம் : ஒ பார்டி நல்ல பார்ட்டி தான்.
ராஜுபிரபு - தொட்ட சிணுங்கி : தலைவா ரஜினி
மோகன் - மௌன ராகம் : நிலாவே வா உட்பட நிறைய பாடல்கள்
கார்த்திக்- அக்னி நட்சத்திரம் : ராஜா ராஜாதி
மு.க.முத்து- அணையா விளக்கு : யாரும் வருவார்
கே. பாலாஜி- அன்புக்கரங்கள் : இரவு முடிந்து விடும்
சிவகுமார்- அக்னி சாட்சி : கனா காணும் கண்கள்
சரத்குமார்- சூரியன் : பதினெட்டு வயது
சரத்பாபு- கண்ணில் தெரியும் கதைகள்: நான் உன்னை நினைச்சேன்
29.10.12 
ரகுமான் -புதுப்புது அர்த்தங்கள் : கேளடி கண்மணி
ரமேஷ் அரவிந்த்- கேளடி கண்மணி : நீ பாதி நான் பாதி
பிரசாந்த் - கல்லுரி வாசல் : என் மனதை கொள்ளை
மேஜர் சுந்தரராஜன் - உயர்ந்த மனிதன் : அந்த நாள் ஞாபகம்
மம்மூட்டி- தளபதி : காட்டுக்குயிலு
பாக்யராஜ் - மௌன கீதங்கள் : மூக்குத்தி பூ மேலே
அரவிந்த்சாமி - மறுபடியும் : நலம் வாழ
ஜனகராஜ்- புதுப்புது அர்த்தங்கள் : எடுத்து நான் விடவா
பூர்ணம் விஸ்வநாதன் - வடைமாலை - வடைமாலை அமரன் ஜெய்
பிரதாப் - சொல்லாதே யாரும் கேட்டால் : போட்டது முளைத்தது
ராதாரவி- சூரக்கோட்டை சிங்கக்குட்டி : அப்பன் பேச்சை கேட்டது
குணால்- காதலர்தினம் : என்ன விலை அழகே
ரிச்சர்ட்ஸ்- காதல் வைரஸ் : பால் நிலா
டி.எம். எஸ். கல்லும் கனியாகும் படப்பாடல்
அப்பாஸ் &;வினீத் : காதல் தேசம் : முஸ்தபா
எஸ்.ஜே. சூர்யா : நியூ : காலையில் தினமும் கண்விழித்தால்
ஜெயம் ரவி - எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி : நீயே நானே
சூர்யா- ஜில்லுனு ஒரு காதல் : முன்பே வா அன்பே வா
அருண் விஜய்- மாஞ்சா வேலு - முன்னேறு ...பரத், சித்தார்த், நகுல் இணைந்து பாடிய- பாய்ஸ் : மாரோ ...
பிரேம்ஜிஅமரன்,ஜெய்   நடித்த கோவா படப்பாடல்,
முரளிக்கு பாடல் எழுதியவர் அவர் மகன் அதர்வா நடித்த பாணாவிற்கும் எழுதியுள்ளார். மிர்ச்சி சிவாவிற்காக தில்லுமுல்லு படப்பாடல்,லொள்ளு சபா ஜீவாவிற்கு 
மாப்பிள்ளை விநாயகர் படத்திற்கும் .சந்தானத்திற்காக"கண்ணா லட்டு தின்ன ஆசையா"விற்கும் எழுதியுள்ளார்.(மூன்றும்  திரைக்கு வரவிருப்பவை).பிரியாணி படத்திற்காக கார்த்தி,எதிர்நீச்சல் படத்திற்காக சிவ கார்த்திகேயன்,
மரியான்,மற்றும் நையாண்டி படத்திற்காக தனுஷ் என்று இவர் பாடல் பட்டியல் நீளுகிறது.
பல்வேறு நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பாடிய தேச ஒற்றுமையை உணர்த்தும் பாரத விலாஸ் பாடல் : இந்திய நாடு என் வீடு .
இது மட்டுமல்ல வாலி அவர்கள் எந்த கதாபாத்திரம் பாடுகிறதோ அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.
தாய்ப்பாசம் பற்றி அவர் எழுதிய பாடல்கள்
தேடி வந்த மாப்பிள்ளை : வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
மன்னன் : அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
நியூ : காலையில் தினமும் கண் விழித்தால்
மும்மதத்திற்கும் அவர் பாடல் இயற்றியிருக்கிறார்.
தாய் மூகாம்பிகை : ஜனனி ஜனனி
முகம்மதுப்பின் துக்ளக் : அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
வெள்ளை ரோஜா : தேவனின் கோயிலிலே
தேவனுக்கு பாடல் எழுதிய அவர் தேவருக்கும் எழுதியுள்ளார். தேவர் மகன்: போற்றிபாடடி பெண்ணே . தோல்வியில் துவண்டு கிடப்பவர்களை தட்டி எழுப்ப வெற்றி வேண்டுமா போட்டு பாரடா -எதிர் நீச்சல் . குழந்தைகளுக்கு அறிவுரைப்பாடல் -நல்ல பேரை வாங்க வேண்டும் :நம் நாடு . ஒற்றுமையை வலியுறுத்தும் ஒண்ணா இருக்க கத்துக்கணும் : அன்புக்கரங்கள். கொள்கைப்பாடல்கள் - நான் ஆணையிட்டால் -எங்க வீட்டுப்பிள்ளை ,மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வ தாய் . பொதுவுடமைப் பாடல் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -படகோட்டி ,காதலியை வர்ணனை செய்யும் பாடல் -மதுரையில் பிறந்த மீன் கொடியை-பூவா தலையா, பிரார்த்தனை பாடல் -இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாத போது தமிழகமெங்கும் ஒலித்தது ), நம்பிக்கைக்கு - நாளை நமதே, சகோதர ஒற்றுமையைக்கு ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்- உரிமைக்குரல்,வர்த்த ரீதியாக ஆட்டம் போடா வைக்கும் -கட்ட வண்டி, இளமை இதோ , பெண்ணின் பெருமையை விளக்கும் மலரே குறிஞ்சி - டாக்டர் சிவா, நவராத்திரி பாடல்- கலை மகள் அலை மகள் - வெள்ளி ரதம் , முதல் ராத்திரிபாடல் - இது தான் முதல் ராத்திரி -ஊருக்கு உழைப்பவன், மதுவின் தீமை பற்றிய தைரியமாக சொல் நீ மனிதன் தானா - ஒளி விளக்கு, சாகா வரம் பெற்ற தத்துவ பாடல் - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன் இப்படி அவர் எழுதிய பாடல்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
அவர் அன்றும் இன்றும் எழுதிய பாடல்கள் பற்றிய ஒரு ஒப்பீடு :
நாயகி தன் தோழியரோடு பாடல் :
அன்று : பருவம் எனது பாடல் : ஆயிரத்தில் ஒருவன்
இன்று : அக்கடான்னு நாங்க உடை போட்டா : இந்தியன்
கடிதப்பாடல் : அன்று : அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும்
இன்று : கண்மணி அன்புடன் நான் எழுதும் - குணா
கேலிப்பாடல் :அன்று: என்ன வேகம் நில்லு - குழந்தையும் தெய்வமும்
இன்று - ஏ மாமா மாமா - மின்னலே .
காதலியிடம் அன்று : இந்த புன்னகை என்ன விலை -தெய்வத்தாய்
இன்று : என்ன விலை அழகே - காதலர் தினம்
வர்ணனைப் பாடல் : ஆழியிலே பிறவாத - பேசும் தெய்வம் (சிவாஜி)
பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன் (பிரபு)
அன்று : அவளுக்கும் தமிழ் - பஞ்சவர்ணக்கிளி (முத்துராமன்)
இன்று : ராஜா ராஜாதி -அக்னி நட்சத்திரம் (கார்த்திக்)
அன்று: உறவு என்றொரு சொல்லிருந்தால் - இதயத்தில் நீ (தேவிகா)
இன்று : அன்பே வா அருகிலே -கிளிப்பேச்சு கேட்கவா (கனகா )
அன்று- என்கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் (சிவகுமார்)
இன்று- முன்பே வா -ஜில்லுனு ஒரு காதல் (சூர்யா) அலெக்ஸ் பாண்டியன்,பிரியாணி படத்திற்காக-கார்த்தி அவர்களுக்கு.

அன்று- ஜெயுச்சுட்டே கண்ணா நீ -கலியுகக்கண்ணன் (தேங்காய் ஸ்ரீனிவாசன்)
இன்று - குக்காத்து மனுஷா -நளதமயந்தி (அவர் பேத்தி ஸ்ருதிகா ),கலைஞர் மகன் மு.க.முத்துவிற்காக அணையா விளக்கு-எவர் மனதில் குடியிருக்கும் 
இன்று கலைஞர் பேரன் அருள்நிதிக்காக வம்சம் படப்பாடல்.
அன்று ஷோபா சந்திரசேகர் பாடிய பாடல் ஓடிப்பிடிச்சு விளையாட :இரு மலர்கள் படத்தின் மகராஜா ஒரு மகராணி
இன்று அவர் மகன் விஜய் பாடிய ஒ ப்யாரி- பூவே உனக்காக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடி நடித்த அம்மா என்றால் அன்பு-அடிமைப்பெண், சூப்பர் ஸ்டார் பாடி நடித்த அடிக்குது குளிரு- மன்னன், கமல் பாடி நடித்த இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன் இப்படி பல பிரபலங்களுக்கு பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி அவர்கள் தான்.
வாழ்க கவிஞர் வாலி வளர்க அவர் புகழ்.

Monday, June 28, 2010

இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்





இதயம் நிறைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதற்கு முன்னால் உலகில் பல நட்சத்திரங்கள் வந்திருக்கலாம்,ஜொலித்திருக்கலாம், பிறகு பொலிவு இழந்திருக்கலாம். ஆனால் எந்த திரையுலகத்திலும் முப்பத்திரண்டு ஆண்டுகள் உச்ச நட்சத்திரமாக ரஜினியை தவிர எவரும் ஜொலித்ததில்லை. இதற்கு காரணம் கடும் உழைப்பு , அவரது வித்தியாசமான ஸ்டைல், யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல மனம், வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் வாரி வழங்கும் விளம்பரம் இல்லா கொடை மனம், பழைய வாழ்க்கையை மறக்காத நற்குணம் மற்றும் எந்த நிலையிலும் அவரை விட்டு பிரியாத அன்பு ரசிகர்களும் தான். அந்த அன்பு தலைவனை வணங்குகிறேன் . எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் போட்டி அவ்வளவாக இல்லை .செக்க்கசிவந்த நிறம் ,கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் சிபாரிசு இவையெல்லாம் சேர்ந்து தான் நடிக்கவே வர முடியும். எம்ஜிஆர் காங்கிரஸில் இணைந்து பிறகு தி.மு.க வில் இணைந்து கழக தொண்டர்களின் பின்னணியில் தானும் வளர்ந்து தி.மு.க வையும் வளர்த்தார். சிவாஜியை தவிர வேறு போட்டியாளர்கள் கிடையாது. ஜெமினி, ஜெய்ஷங்கர் போன்றவர்கள் குறைந்த பட்ஜெட் நடிகர்கள்.ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளரவும் விட மாட்டார். ஆனால் ரஜினி நடித்த காலகட்டங்களில் பல நடிகர்களை வளர விட்டு தானும் வளர்ந்தார்.கமல், சிவகுமார், ஜெய்ஷங்கர் இவர்கள் ஒரு காலகட்டம் , டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ், தியாகராஜன், ஆனந்த்பாபு ,இவர்கள் ஒரு காலகட்டம்,பிரபு, ராமராஜன், மோகன் இவர்கள் ஒரு கால கட்டம் , பிறகு முரளி ,கார்த்திக், சுரேஷ் இவர்கள் ஒரு காலகட்டம், அடுத்து ராஜ்கிரண் ,பிரபுதேவா, அர்ஜுன், இவர்கள் ஒரு காலகட்டம், பிறகு அஜித் ,விஜய்,பார்த்திபன் , பிரசாந்த் என்று ஒரு காலகட்டம், பிறகு சிம்பு,தனுஷ், சூர்யா என்ற ஒரு காலகட்டம்,அதன் பிறகு கார்த்தி, பரத்,ஆர்யா இப்படி பல இளைய தலைமுறை நடிகர்கள் மட்டுமல்ல ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பி. வாசு ,ஷங்கர், பாலா இப்படி இயக்குனர்களின் கால கட்டங்களிலும் உச்ச நட்சத்திரமாக தொடர்ந்து நிற்கிறார்.யாருடைய வளர்ச்சியையும் விரும்பி வாழ்த்துவார். அதை தடுக்க முற்பட்டதே இல்லை. ஒரு கருப்பான உருவம் கதாநாயகனாக முடியும் என்று உலக சினிமாவில் நிரூபித்த முதல் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.உலகத்திலேயே திரைப்படபாடல்கள் அடங்கிய சி.டி. வெளிவரும் போதுஅமர்க்களப்படுவது சூப்பர் ஸ்டார் பட சி.டி. வெளியாகும் போது தான். இப்போது கூட சென்னை ரிச்சி தெருவுக்கு சி.டி.வெளியாகும் தினம் போனால்அதை பார்த்து மகிழலாம். தமிழ் நாட்டின் திருவிழா தலைவரின் பட வெளியிட்டு நாள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த வித பின்னணியும் இல்லாமல் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அன்புத்தலைவர் வாழ்க வாழ்க.